சேலத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயன்று கடன் பிரச்சனையால் மனமுடைந்த வெள்ளி பட்டறை உரிமையாளர், மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். வெள்ளி பட்டறை வைத்து தொழில் செய்து வரும் அவர், மனைவி ரேகா, மகள் ஜனனியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி குடிபுகுந்துள்ளார். அதாவது புதிய வீடு கட்டுவதற்காக பல லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளி தொழிலும் லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. வெள்ளி கொலுசு தயாரிப்பிலும் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து அதை திரட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் இதனால் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடன் கொடுத்தவர்கள் அனைவரும் பணத்தை திருப்பிக்கேட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு பதில் கூறமுடியாமல் மனமுடைந்த வெள்ளி பட்டறை உரிமையாளர் பால்ராஜ் அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகிய மூவரும் நேற்று இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது 3பேரும் சடலமாக கிடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளப்பட்டி போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.