லிவிங் டு கெதரில் வாழ்ந்த ஆதரவற்ற இளம்பெண், தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், பைக்கில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு உடலை காதலன் எரித்த சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமைதி சோலை பகுதியில் கடந்த 13ஆம் தேதி உடல் முழுவதும் எரிந்த நிலையில், இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த சடலத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த கன்னிவாடி போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உடல் முழுவதும் எரிந்ததால் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு 6-வதாக ஒரு விரல் இருப்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, மதுரை, திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் காணாமல்போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர், 6-வது விரல் கொண்ட பெண் காணாமல் போயுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது, மதுரையில் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் மாயமானது தெரியவந்தது. மேலும், விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்ட பெண் மதுரை பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும், இவர் பெற்றோரை இழந்து மதுரை ஆசிரமத்தில் வளர்ந்ததும் தெரியவந்தது. மாரியம்மாளுக்கும், திண்டுக்கல் மாவட்டம் எமக்கல்லாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. தனது காதலனுக்காக மதுரையில் இருந்து திண்டுக்கல் வந்து மாரியம்மாள் ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் பிரவீனும் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வருடமாக இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நிலையில், 2 முறை மாரியம்மாள் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று கூறி கர்ப்பத்தை பிரவீன் கலைக்க செய்துள்ளார். இதற்கிடையே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரவீனை மாரியம்மாள் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று மாரியம்மாளை அமைதி சோலை பகுதிக்கு தனியாக பிரவீன் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும்போதே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆத்திரமடைந்த பிரவீன், வண்டியில் இருந்து மாரியம்மாளை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து பயந்துபோன பிரவின், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாரியம்மாளின் உடலை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பிரவீனை பிடித்து விசாரித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!