தங்கையுடன் கள்ளத்தொடர்பு மற்றும் அவரின் தற்கொலைக்கு காரணமான நண்பனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போல் நாடகமாடிய கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே காவிரி கரையோரம் கடந்த 16ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சடலத்தை கைப்பற்றிய கருமலைக்கூடல் போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வாலிபர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. விசாரணையில், அவர் சின்னகாவூரை சேர்ந்த ஜேசிபி ஆப்பரேட்டர் முத்து (35) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் தான், இந்த வழக்கில், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாணியம்பாடியில் உள்ள தனியார் கரும்பாலையில் கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வந்துள்ளார். அங்கு, இவரும், முத்துவும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, கிருஷ்ணமூர்த்தியின் தங்கை (38), அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மேட்டூர் அடுத்த புதுசின்னகாவூரில் வசித்து வந்தார். இதில், முத்துவுக்கும், கிருஷ்ணமூர்த்தியின் தங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரிந்தவந்த நிலையில், மனமுடைந்த அந்த பெண், 10 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இந்த கள்ளக்காதல் விவகாரம் கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்தது. கடந்த 16ஆம் தேதி முத்துவை, அனல்மின் நிலையம் எதிரே உள்ள காவிரி கரைக்கு கிருஷ்ணமூர்த்தி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தங்கையுடன் தொடர்பு, அவரது தற்கொலை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, முத்துவின் தலையில் அடித்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், தற்கொலை போல் இருக்க வேண்டும் என்பதற்காக, உடலில் பூச்சி மருத்தை தெளித்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.