தம்பியை தாக்கியதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை அடுத்த மண்மலை ஊராட்சி, செங்கக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 33) கட்டட தொழிலாளி. இவருக்கு பவித்ரா (27) மற்றும் ராமலட்சுமி (25) என இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு முதல் மனைவி பவித்ராவுக்கும் கோபாலுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சண்டையை தடுக்க வந்த பவித்ராவின் தம்பி மஞ்சுநாத் (25) என்பவரை கோபால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பவித்ரா, உருட்டுக்கட்டையால் கோபால் தலையில் அடித்துள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர், அதிர்ச்சி அடைந்த பவித்ரா மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு, குடும்ப சண்டையில் தனது கணவரை தாக்கியதாகவும், அவர் மயங்கி விழுந்ததாகவும் பவித்ரா கூறியிருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அவர்களை அழைத்துக் கொண்டு போன போலீசார், அங்கு சென்று பார்த்தபோது கோபால் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அக்கா – தம்பி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.