பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 25ம் தேதி முதலே அச்சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்கும் விதமாக கடந்த ஜனவரி 10 தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4-வது நாளில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரமும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரமும் பேரவையில் எதிரொலிக்கும் நிலையில், குற்றங்களுக்கு மிக, மிக கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில், மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

18 வயதுக்குட்பட்ட பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை சம்பந்தபட்டவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும். பெண்களை பின் தொடர்ந்தால் பிணையில் விடுவிக்காதபடி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்கள் மீது ஆசிட் வீசினால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, கடந்த 25ம் தேதி ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த சட்டத்திருத்தம் அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: எடப்பாடி அருகே கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட கட்டிட தொழிலாளி!. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!