வீட்டிற்கு சமையல் செய்துக்கொண்டிருக்கும்போது திடீரென நுழைந்த காட்டு யானையால் வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தெக்குபாளையம் பகுதிக்குள் நேற்று திடீரென ஒன்றை ஆண் காட்டு யானை புகுந்தது. யானையின் மிரட்டலான உருவத்தை பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, தெற்கு பாளையம் கென்னடி தென்றல் அவன்யூ பின்புறம் வடமாநிலத் தொழிலாளர் 4 பேர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இரவு 9 மணி அளவில் வீட்டில் இளைஞர்கள் சமையல் செய்வதில் பிசியாக இருந்துள்ளனர்.

அப்போது கதவு திறந்து வைக்கப்பட்டிருந்ததால், உலா வந்த ஒற்றை காட்டுயானை அறைக்குள் திடீரென புகுந்தது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசியை கீழே கொட்டி சாப்பிட்டது. மேலும் சமையல் பொருட்களை வெளியே எடுத்து தும்பிக்கையால் வீசியது, இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் யானையை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் யாரும் யானையை விரட்ட முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Readmore: 1000 காளைகளுக்கு மத்தியில் அலங்காநல்லூரை அலறவிட்ட ’பாகுபலி’ காளை..!! சொந்த ஊரான சேலத்தில் உற்சாக வரவேற்பு..!!