சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விஜயா பானுவை விடுதலை செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை பெயரில் பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி விளம்பரப்படுத்தி மோசடி நடைபெற்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு உள்பட 7 பேரை பொருளாதார போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

12.5 கோடி பணம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் மாவட்ட கருவூலத்தில் இருந்து 12.5 கோடி பணம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவை 10பெட்டிகளில் காவல்துறை வாகனத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பாக ஸ்டேட் பேங்கில் அரசு கணக்கில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர், சையதுமுகமது உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அறக்கட்டளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் 500 கோடி வரை மோசடியில் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி வழக்கில் கைதான விஜயபானு மற்றும் ஜெயப்பிரதாவின் ஆறு வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அழகாபுரம் பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் விஜயபானுவின் கார் ஓட்டுநர் சையது முகமது என்பவர் கணக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கில் 84 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

இருப்பினும், விஜயாபானு மிகவும் நம்பிக்கைக்குரியவர், அவர் சிறையில் இருந்து வந்தவுடன் பணத்தை திரும்ப தந்து விடுவார் என பொதுமக்கள் நம்பிக்கையோடு இருப்பதாகவும், அதுமட்டுமல்ல, 2000 க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் ஏமாந்துள்ள நிலையில், வெறும் 119 பேர் மட்டுமே இதுவரை போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் மற்றவர்களும் புகார் அளித்தால்தான் பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில், பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்டு தர வேண்டும், அல்லது கைது செய்யப்பட்ட விஜயபானுவை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “விஜயபானுவை விடுதலை செய்தால் பணத்தை, நாங்களே வாங்கிக் கொள்கிறோம். போலீசார் நடத்திய சோதனையால் தான் எங்களது பணம் கிடைக்காமல் போய்விட்டது” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Readmore: இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு..!! ஒரு அட்டைக்கு எத்தனை கிலோ..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!