தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி போலவே சிறுதானியங்கள் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது. தமிழகத்திலும் மானிய விலையிலும் இலவசமாகவும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு நிறைய சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன.
இந்தநிலையில், ரேஷன் கடைகளில் புதிய பொருட்களை விநியோகம் செய்வது குறித்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனடிப்படையில், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் கம்பு, சாமை, வரகு, குதிரை வாலி, திணை, உள்ளிட்ட சிறு தானியங்கள் வழங்க ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது,அரிசி போலவே சிறுதானியங்கள் கூடிய விரைவில் வழங்கப்படும். அதேபோல் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விருப்பப்படி அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக்கொள்ள முடியும். மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும் ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமையை விலையில்லாமல் வாங்கிக்கொள்ள முடியும். இதுவரை 7 இலட்சத்து 25 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.