‘ மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் வழங்கப்படும் முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, வாழைக்கன்று ஆகிய மரக்கன்றுகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் மண் வளத்தை காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான இயற்கை வேளாண்மை போன்ற வேளாண் செய்முறைகளை ஊக்கப்படுத்தவும், ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது, சேலம் மாவட்டம் முழுவதும் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, வாழைக்கன்றுகள் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட 4 பயிர்களின் மொத்த மதிப்பு ரூ.60 ஆகும். இதில், விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ.15 ஆகும். மீதமுள்ள 45 ரூபாயை தமிழ்நாடு அரசு, டெண்டர் விடப்பட்டவர்களுக்கு செலுத்திவிடும்.

இந்நிலையில், முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, வாழைக்கன்று ஆகிய 4 பயிர்களுமே தரமற்று இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த பயிர்களை நட்டு வைத்தால், வளர்ச்சி இல்லாமல் காய்ந்து விடுவதாகவும் அதிலும் முருங்கை, கருவேப்பிலையில் பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்டம் முழுவதுமே இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதால், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவர்கள், இந்த பயிர்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.