கொங்கணாபுரம் அருகே மாநில நெடுஞ்சாலைக்கு வெள்ளைக்கோடு அமைக்கும் பணியின்போது லாரியில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு வரை தாரமங்கலம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சின்னப்பம்பட்டி அருக சாலைப் பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பணிகள் நிறைவடைந்த சாலையில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வெள்ளைக் கோடு அமைப்பதற்காக லாரியில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி பெயிண்ட்டை காய்ச்சும் பணி நடந்து வந்தது. அப்போது, லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்தது. இதனால், பதறிப்போன தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், திடீரென கேஸ் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அனைவரும் உயிர் தப்பினர். மாதவன் என்ற இளைஞருக்கு காலில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் அப்போது வாகனம் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.