நாட்டில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவது, ஃபாஸ்டேக் பெறுவது போன்ற செயல்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு பெறுவது கட்டாயமாக்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது அதிகளவிலான வாகனங்கள் மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில், எதிர்காலத்தில், மூன்றாம் தரப்பு காப்பீட்டை ஊக்குவிப்பதற்காக நிதி அமைச்சகம் பல கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜியுடன் எரிபொருள் நிரப்புவது மற்றும், ஃபாஸ்டாக் உரிமம் பெறுவதற்கு காப்பீடு பெறுவது காட்டாயமாக்கவும் இந்த மூன்றாம் தரப்பு வாகன காப்பீட்டு சான்றிதழை கட்டாய ஆவணமாக மாற்றும் முறையை கொண்டு வர சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் தரப்பு கவரேஜ் இல்லாமல் எந்த வாகனமும் பொதுச் சாலைகளில் இயங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, மோட்டார் வாகனக் காப்பீடு தொடர்பான பல்வேறு முயற்சிகளை ஆராயுமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நிதி அமைச்சகத்தின் திட்டங்களில், மூன்றாம் தரப்பு காப்பீடு உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் மற்றும் ஃபாஸ்டேக் ஆகியவை கிடைக்கும் என்ற நிபந்தனையும் உள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், , அமைச்சகம் இந்த திட்டங்களை தீவிரமாக உருவாக்கி வருவதாகவும், ஒழுங்குமுறை மாற்றங்கள் விரைவில் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இந்த முயற்சி வாகனம் தொடர்பான சேவைகளை காப்பீட்டுத் திட்டத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் செல்லுபடியாகும் காப்பீடு உள்ள வாகனங்களுக்கு மட்டுமே சேவை செய்வதை உறுதி செய்கிறது. மேலும், இந்த புதிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.
1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. விபத்து ஏற்பட்டால் மற்றவர்களுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுகட்ட இந்த வகை காப்பீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு இந்த காப்பீட்டை பெறாமலேயே உள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 34 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இருந்தன, ஆனால் அவற்றில் சுமார் 43-50% மட்டுமே செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு காப்பீட்டைக் கொண்டிருந்தன. 2024 ஆம் ஆண்டில், ஒரு நாடாளுமன்றக் குழு இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மார்ச் 2020 நிலவரப்படி, சுமார் 6 கோடி வாகனங்கள் காப்பீடு செய்யப்படாதவை என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.