மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், எண்ணற்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஏறத்தாழ 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 2021-22 பட்ஜெட், 2022-23 பட்ஜெட், 2023-24 பட்ஜெட், 2024-25 என நான்கு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், 2021-22, 2022-23, 2023-24 ஆகிய முதல் மூன்று பட்ஜெட்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, 2023 மே மாதம் நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார்.

இதையடுத்து, 2024-25 பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் அரசு உதவிப்பெறும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் ஆகிய அறிவிப்புகள் கடந்த பட்ஜெட்டில்தான் வெளியானது. மேலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ விரிவாக்கம், கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ விரிவாக்கம் என சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்தும் கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தேசிய கீதம் சர்ச்சை, இதையடுத்து, அண்ணா பல்கலை, மாணவி விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதம் நடைபெற்றன. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாதம் 2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அடுத்த நாள் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Readmore: சேலத்தில் கோடிகளை அபேஸ் செய்த விஜயா பானு!. விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மக்கள்!. என்ன நடந்தது?.