”கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை பார்த்துவிடலாம்” என முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டில் நேற்று சம்மன் ஒட்டப்பட்டது. இதையடுத்து, இந்த சம்மன் கிழிக்கப்பட்டதால், அங்கு பெரிய கலவரமே நடந்தது. இந்நிலையில், இதுகுறித்து தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”நான் சென்னையில் இல்லை என்பது போலீசுக்கு தெரியும். அப்படி இருந்தும் என் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தான் என் மனைவி இருந்தாரே, அவரிடம் சம்மனை கொடுக்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு வீட்டின் கேட்டில் சம்மனை ஒட்டுகிறீர்கள். அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா? இல்லை ஊரே பார்ப்பதற்கா?
என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை என்பதால், விஜயலட்சுமியை வைத்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டுகள் வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். கருணாநிதி மகனா, இல்லை இந்த பிரபாகரன் மகனா? என்பதை 2026 சட்டமன்ற தேர்தலில் பார்த்துவிடலாம். என்னை பார்த்தால் பயப்படுற மாதிரி தெரியுதா..? ஒரு பெண் புகார் கொடுத்தாலே நான் குற்றவாளியா..? 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா? 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல்துறையினர் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று பேசியுள்ளார்.