சேலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்த நிலையில், ரூ.1 லட்சம் பணமும், பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பானு. இவருக்கு வயது 35. இவர், தனது கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார். நேற்று (ஜனவரி 18) வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பானு சென்றுள்ளார். மாலை 3.30 மணியளவில் இவரது ஓட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அருகில் இருந்த வெற்றிவேல் (60) என்பவரது வீட்டிற்கும் பரவியது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்து வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீடு தீப்பிடித்து எரிந்த தகவல் கிடைத்ததும் பானு அலறி அடித்துக் கொண்டு வந்தார். அவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ், எல்.இ.டி. டிவி, வாஷிங் மெஷின் மற்றும் பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

மேலும், வெற்றிவேல் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் பொருட்களும் தீயில் கருகின. இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வீட்டில் இருந்த சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Read More : நடுங்கும் தலைநகரம்!. அண்ணன், தம்பி ஓட ஓட வெட்டி கொலை!. 6 தனிப்படைகள் அமைப்பு!. தீவிர விசாரணை