தலைக்கேறிய மதுபோதையால், 60வயது மூதாட்டியை ஏரிக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர் சென்னாங்காரணி கிராமத்தில் வசித்து வரும் தனது மகள் வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது, மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்னாங்கரணி ஏரிக்கரைக்கு மூதாட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு அடையாளம் தெரியாத ஒருவர் மூதாட்டியை புதருக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மூதாட்டி சத்தம் போட்டதால், அவரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் சென்னாங்கரணி பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் ராஜா ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் ராஜாவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை, மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டதற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கையும் ஒத்துப்போனது.
இதையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தாய் தந்தையை இழந்த ராஜா, தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ படித்துள்ள அவர், கூலிவேலைக்கு சென்று வருவதாகவும், மது பழக்கத்திற்கு அடிமையானதும் விசாரணையில் தெரியவந்தது.