ஒரு படத்தில் வடிவேலு எதுவும் செய்யாமல் சும்மாவே இருப்பார். சும்மா இருப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்டுவிட்டு, தானும் சும்மா இருக்க முயற்சி செய்து ஒரு ஆளு படாதபாடு படுவார். உண்மையில், நம்மால் சும்மா இருக்க முடியுமா. முடியும் என்றால் எவ்வளவு நேரம் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க முடியும். அப்படி ஜப்பான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், சும்மா இருப்பதையே பணியாக செய்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல், அவருக்கு வருமானம் லட்சக்கணக்கில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, ஜப்பானை சேர்ந்த ஜோஷி மோரி மோட்டோ என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு எந்த வேலைக்கும் செல்லாத நிலையில், தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக அதாவது நண்பராக செல்வதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து வருகிறார். தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக உரையாடும் நண்பராக அவர் வாடகைக்கு சென்றுள்ளார். இந்த பணியில் அவர் ஈடுபட்டு பிரபலம் அடைந்துள்ளார். மேலும், ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது பேச்சு துணையாக செல்வது, வீடியோ காலில் அவர்களுடன் பேசுவது, இசை நிகழ்ச்சிக்கு வாடிக்கையாளர்களுக்கு துணையாக நண்பராக செல்வது போன்ற சேவைகளை செய்துள்ளார்.
தற்போது, 41 வயதாகும் ஜோஷி மோரி மோட்டோ, இதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் டாலர்களை ஷோதி சம்பாதித்து வருகிறார். அதாவது இந்திய மதிப்பில் 69 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு சம்பாதித்து வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும், வாடகை நண்பர் வேண்டும் என்று ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வருவதாகவும், இரண்டு முதல் மூன்று மணி நேரம் செலவிடுவதற்கு அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் வரை பெற்று வருவதாகவும் ஷோதி தெரிவித்துள்ளார்.