சங்ககிரி அருகே பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில், பீரோவில் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். அருகே அரசு ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி அலுவலர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்துடன் அவர் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 56 சவரன் நகை மற்றும் ரூ.25,000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர், பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூரில் இருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீடு திறந்திருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையிலும், நகை, பணம் மாயமாகியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பதறிப்போன அரசுப் பள்ளி அலுவலர், உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார், இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.