கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில், மறுவீட்டு விருந்திற்கு தந்தை வீட்டிற்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் கௌசல்யா. இவரது தந்தை பரமேஸ்வரன், தேனி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மகள் கௌசல்யாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்து அதன்படி, புதுப்பட்டியை சேர்ந்த பாலாஜி (28) என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் காலை, கம்பம் புதுப்பட்டியில் உள்ள பாலாஜியின் வீட்டில் பாலாஜிக்கும், கௌசல்யாவுக்கும் திருமணம் நடந்தது. பிறகு மாலையில் மறுவீட்டு விருந்திற்காக கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள பரமேஸ்வரன் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றுள்ளனர்.

இதையடுத்து, முகம் கழுவிட்டு வருவதாக கூறிவிட்டு கௌசல்யா அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வெளிய வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள், கதவை தட்டியுள்ளனர். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து கௌசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜதானி போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌசல்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற ஆசையில் இளம்பெண் இருந்ததாகவும், இதனால் திருமணத்திற்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்ததாகவும், இதனால் இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், இளம்பெண்ணின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: கட்சி கொடி இருந்தா மட்டும் சும்மா விட்ருவோமா?. விஜய்யின் தவெக கொடியுடன் தாறுமாறாக ஓடிய கார்!. போதையில் இருந்த இளைஞர்களுக்கு தர்மஅடி!