திருமணமானதை மறைத்து ஏமாற்றியதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரை சேர்ந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சில நாட்களில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் நெருங்கி பழகி பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக இளம்பெண் போன் செய்தாலும், காதலன் பிரகாஷ் எடுக்காமல் இருந்துள்ளார். இருப்பினும், கடந்த 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க காதலனுக்கு இளம்பெண் போன் செய்துள்ளார். அப்போது பிரகாஷ் ‘தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால், மனமுடைந்த விஜயா, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விஜயா உயிரிழப்பதற்கு முன்பு சைதாப்பேட்டை 17வது நடுவர் மருத்துவமனையில் விஜயாவிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார்.
அதில், காதலன் பிரகாஷ் திருமணம் ஆனதை மறித்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், கார் வாங்க ரூ.1 லட்சமும், நகை வாங்க ரூ.80 ஆயிரம் என மொத்தம் ரூ.1.80 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.