சேலத்தில் மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட மாமனாரை, அடித்துக்கொன்ற மருமகன் மற்றும் அவரது 2வது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்துார், ஏழு பரணைக்காட்டை சேர்ந்தவர் சரத் சந்திரன். இவரது மனைவி நிர்மலா. இவர்களது ஒரே மகளான புனிதாவை அப்பகுதியை சேர்ந்த விவசாயி புண்ணியமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே, சந்திரனின் மனைவியும், மகளும் இறந்துவிட்டனர். இந்தநிலையில், புண்ணியமூர்த்தி 2வதாக குரும்பனூரை சேர்ந்த லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சந்திரனுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அவரது பேரக்குழந்தைகள் மீது உயில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனிமையில் இருந்த சந்திரனை, புண்ணியமூர்த்தியும், மனைவி லட்சுமியும் பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சந்திரனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக இந்த மாதமும் மருத்துவ செலவுக்காக சந்திரன், புண்ணியமூர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தம்பதி இருவரும் சேர்ந்து, சந்திரனை கழி கிண்டும் கம்பால் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் இருவரும் சேர்ந்து சந்திரனின் உடலை குழித்தோண்டி அடக்கம் செய்துள்ளனர்.
இதையடுத்து, சந்திரன் காணாமல் போனதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் , புண்ணியமூர்த்தி மற்றும் லட்சுமியிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். தீவிர விசாரணைக்கு பின் கொலை செய்ததை தம்பதி ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.