குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை பணியின்போது, பாறைகளை தகர்ப்பதற்காக தோட்டா வெடிக்க செய்தபோது, அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சி குறுக்குப் பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை வளாகம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் 22-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து விடுவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை அமைக்கும் பணியின்போது, பாறைகளை தகர்ப்பதற்காக தோட்டா வைத்து வெடிக்க செய்துள்ளனர். ஆனால், அந்த தோட்டா வெடித்து சிதறி, இருபது நாட்களுக்குள் கட்டிய சுற்றுச்சுவரை தூள் தூளாக்கியது. இதற்கு மிக அருகாமையில் குடியிருப்புகளும் உள்ளதால், பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த பாறைகளை தகர்க்கும் பணிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலே, இப்பணிகள் நடந்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்து உள்ளனர். அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.