சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவம்பர் 3) நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா. திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ‌திமுகவில் அரசியலிலும், அதிகாரத்திலும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சரானார். தற்போது, திமுகவில் பல மூத்த தலைவர்கள் இருந்தும் உதயநிதியை துணை முதல்வராக்கியுள்ளனர்.

திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்திருந்தால் அக்கட்சியில் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டிருக்கும். தற்போது ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. திமுகவினர் மூத்த அமைச்சர்களை உதாசீனப்படுத்திவிட்டனர். திமுகவில் ஸ்டாலின் அரசராகவும், உதயநிதி இளவரசராகவும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியுள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Read More : நிர்வாணமாக கார் ஓட்ட அனுமதி, பகலில் ஹெட்லைட், காரை கையால் கழுவ தடை..!! விசித்திரமான சாலை விதிகள் கொண்ட நாடுகள் பற்றி தெரியுமா..?