சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மயானம் அருகே உள்ள காலியிடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், இப்பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அரசிராமணி குறுக்குப்பாறையூர் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி செயல்முறைகளின்படி, நில உரிமை மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து செங்கோடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், குறுக்குப்பாறையூரில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் குப்பைகளை கொட்டி வருவதால், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பல இடங்களில் அரசு நிலங்கள் இருந்தும் வேண்டுமென்றே எங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டி வருவதாகவும், இதனால் எங்கள் ஊரின் விவசாய நிலங்கள், குடித் தண்ணீர் மற்றும் ஏரி, குளங்கள் இருந்து வருவதால், எங்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை வேறு பகுதிக்கு மாற்றியமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : Accident | லாரி மீது மோதிய அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ்..!! நோயாளி உள்பட 3 பேர் பரிதாப பலி..!!