பாம்பு கடியை நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என எதிர்க் கட்சி தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாம்பு கடிக்கான போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக விளக்கமும் அளித்துவருகிறார்.
பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய முறையில் சிக்கிச்சை பெற வேண்டும். ஒருவேளை தாமதமானால், அது உயிரிழப்பு அளவிற்கு கொண்டுச்சென்றுவிடும். இந்நிலையில், பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இதனால், பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். குறிப்பாக ஊரக பகுதிகளில் பாம்பு கடிக்கான மருந்துகளை தேவைக்கு ஏற்ப அளவுக்கு வைத்திருப்பதன் மூலம் பாம்பு கடியால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும்.