பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பாசனப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது செங்கரும்பு. இந்த செங்கரும்பை விவசாயிகள் ஏப்ரல் மாதத்தில் விதைத்து, மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்வது வழக்கம். சேலம் மாவட்டத்தில் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள காவிரி பாசனப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், கரும்பை வெட்டி சென்னை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட வெளியூருக்கு அனுப்ப வேண்டியிருப்பதால், கரும்பு வெட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு முழு நீள கரும்பையும் வழங்குவதால், அதற்கு தேவையான கரும்பை உள்ளூரிலேயே கூட்டுறவுத் துறையினர் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லு குறிச்சி, நெடுங்குளம், சிலுவம்பாளையம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில், கரும்பு வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மொத்த வியாபாரிகளால் இப்பகுதியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் புனே, சூரத், ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் முழு நீள கரும்பையும் வழங்குவதால், செங்கரும்புக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், தற்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வயலுக்கு நேரில் வந்து விவசாயிகளை அணுகி செங்கரும்பை வாங்கிச் செல்கின்றனர். அதாவது, பூலாம்பட்டி பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 350 முதல் ரூ. 420 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,கடந்தாண்டு முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக போதிய அளவில் தண்ணீர் திறப்பு இருந்ததாலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்ததாலும், நிகழ் ஆண்டில் காவிரி பாசன பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும், கூடுதல் விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Readmore: பாத்ரூமுக்குள் நடந்த பயங்கரம்..!! ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கேமரா..!! தீயாய் பரவிய வீடியோ..!! டிஎஸ்பியை தூக்கி அடித்த டிஜிபி..!!