தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மத்திய சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேபோல், கடந்த 2014ஆம் ஆண்டு வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பலவகையான கலவை சாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது வெஜ்பிரியாணி, தக்காளி சாதம், கறிவேப்பிலை சாதம் என மசாலா முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மூலம் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான 20,74,039 மாணவர்களும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 21,97,914 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் 43,131 சத்துணவு மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முதல்வர் முக.ஸ்டாலினால், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சத்துணவு மையங்களில், முட்டையை உரிப்பதற்கு பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முட்டை உரிக்கும் எந்திரம் கொண்டு வருவதற்கு சமூக நலன் துறை முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இருப்பதால், நாள்தோறும் 500 முட்டைகளை வேக வைத்து உரிக்கும் போது முட்டைகள் வீணாகிறது. அதோடு சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, முட்டை உரிப்பதற்கு எந்திரம் வாங்க தமிழ்நாடு அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.