திமுக மூத்த தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் துரைமுருகன்(86) தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருவதுமாக இருந்தார்.

இந்நிலையில் காட்பாடியில் இருந்து வந்த பாரத் ரயில் மூலம் சென்னை செல்ல முயன்ற போது அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் உடனை அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore:சென்னையில் நிலஅதிர்வா?. தலைமைச் செயலக கட்டிடத்தில் விரிசல்!. பதறி ஓடிய அதிகாரிகள்!