தாபா உணவகத்தில் நண்பர்களுடன் சென்று சிக்கன் சாப்பிட்டபோது புரை ஏறியதில் மேட்டூர் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாகவே ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் போது திடீரென மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஹோட்டல்களில் உணவுகளை முறையாகச் சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்குத் தருவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக அசைவ உணவுகளைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பதாலும் அதை முறையாகச் சமைக்காமல் வாடிக்கையாளர்களுக்குத் தருவதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால் புட் பாய்சனிங் ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது புரையேறியதில் உயிரிழந்தார். சேலம் தளவாய்ப்பட்டி சித்தனூரை சேர்ந்தவர் தினேஷ் குமார்(40). இவர் மேட்டூரில் உள்ள தனியார் வங்கியில் கிளையில் பணிபுரிந்து வருகிறார். தினமும் பணி நிமித்தமாக மேட்டூரில் இருந்து ஓசூருக்கு காரில் சென்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்தநிலையில், தினேஷ் குமார் மற்றும் ஓசூர் வங்கி மேலாளர் பரணிதரன், மேட்டூரில் பணிபுரியும் சந்திரமோகன் ஆகியோர் புதுச்சாம்பள்ளி உள்ள தாபா உணவகத்தில் இரவு 10 அளவில் சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது, சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தினேஷுக்கு திடீரென புரையேறியுள்ளது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு குஞ்சாண்டியூர் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று தினேஷ்குமாரின் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: ‘எல்லோரும் விட்டுபோய்டாங்க’!. கொரோனாவில் பிள்ளைகளை இழந்தேன்!. திருப்பதியில் மனைவியை இழந்துவிட்டேன்!. சேலம் பெண்ணின் கணவர் வேதனை!