சேலத்தில் நில அளவீடு செய்துகொடுக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய கெங்கவல்லி தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தமிழகத்தில், வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு என பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவிஉள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சில அதிகாரிகள், அலுவலர்களால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, நேற்று கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமானால், ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்றும் தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தை அமாவாசை என்பதால், 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணம் தர வேண்டும் என்றும் தாசில்தார் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் பேரில் மஞ்சுளா, பணத்தை தாசில்தாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள், பாலகிருஷ்ணன் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.