ஒரே வீட்டில் வசித்து வந்த 2 மனைவிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவன், முதல் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் திலீப் சிங்(50). காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (45). தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான திலீப், தனது இரண்டாவது மனைவியையும் அதே வீட்டில் தனி அறையில் குடிவைத்து வசித்து வருகின்றனர். தினமும் குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு செல்லும் திலிப்பிடம் முதல் மனைவி பார்வதி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுமட்டுமின்றி நேபாளத்தில் இருந்த 2-வது மனைவியையும் கூட்டிவந்து ஒரே வீட்டில் தனி அறையில் தங்க வைத்தது பார்வதிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தலைக்கேறிய போதையில் இருந்த திலீப், பார்வதியிடம் தனது இரண்டாவது மனைவி தயாரித்த உணவை சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அதை பார்வதி சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திலீப் சிங் கத்தியால் பார்வதியை குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பார்வதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.