உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்றுவருகிறது.இந்த மஹா கும்பமேளா ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான புனித இடமான சங்கமத்தில் இந்த பிரம்மாண்ட நிகழ்வு நடக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படுகிறது.இந்த நிகழ்வில் பங்கேற்க நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 40 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர். புனித நீராட்டம், யாகங்கள் மற்றும் மற்ற ஆன்மிக நிகழ்வுகள் பக்தர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
மகா கும்ப மேளாவில் எப்படியாவது நீராட வேண்டும் என்பதற்காக பக்தர்கள் பல்வேறு வழிகளில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில் பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் வாரணாசி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை பயணிகள் ரயில் என்ஜினில் ஏறி பயணிக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் இருக்கைகள் பற்றாக்குறையால், கும்பமேளாவுக்கு சென்றே ஆகவேண்டும் என்ற ஆர்வத்திலும் அவசரத்திலும்,பயணிகள் ரயில் எஞ்ஜின்களுக்குள் புகுந்தனர். இதையடுத்து, உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், அவர்களை என்ஜினில் இருந்து அகற்றினர். தொடர்ந்து இந்த பயணத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர். இதையடுத்து மற்ற ரயில் பெட்டிகளில் உட்கார ரயில்வே போலீசார் ஏற்பாடு செய்தனர்.