தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, நகைக் கடனை பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, விவசாய பயன்பாட்டிற்காக வைக்கப்படும் நகைக்கடன்களுக்கு பரிசீலனை கட்டணத்தில் இருந்து (Processing Fee) முழு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஜனவரி 31, 2025 வரை மட்டுமே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

பரிசீலனைக் கட்டணம் என்றால் என்ன..?

பொதுவாக வங்கிகளில் எந்தவொரு கடன் பெற்றாலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படும். இது நகைக் கடனுக்கும் பொருந்தும். நகைக் கடன் தொகை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உடனே இந்த கட்டணம் பிடித்தம் செய்யப்படும் அல்லது நகைக்கடன் வட்டி செலுத்தும் போது சேர்த்து வசூலிக்கப்படும். இவ்வாறு கட்டணங்கள் இருப்பதே பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தெரியாத ஒன்று.

அவர்களைப் பொறுத்தவரை, “நகை மதிப்பீட்டாளருக்கு கட்டணம் கொடுத்து விட்டோமே. இப்போது எதற்காக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற குழப்பமே நீடித்து வருகிறது. மேலும் பலர், நகைக் கடன் வைத்த அன்று கவனிக்காமல் சிறிது நாட்களுக்கு பிறகு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக வங்கி ஊழியர்களிடம் புகாரளிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இது குறித்த தகவல் பலகை, வங்கியில் ஆங்காங்கே ஒட்டி வைத்தால் மக்கள் விழிப்புணர்வு அடையலாம்.

பரிசீலனைக் கட்டணம் எவ்வளவு..?

பரிசீலனைக் கட்டணங்களை பொறுத்தவரை வங்கிகள் பொருத்து மாறும். கடன் தொகையில் 0.1 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் வரை வேறுபடுகின்றன. இதில் 18% ஜிஎஸ்டியும் வங்கியால் வசூல் செய்யப்படுகிறது.

இந்தியன் வங்கியின் ஆஃபர் என்ன..?

விவசாய பயன்பாட்டிற்காக வைக்கப்படும் நகைக் கடன்களுக்கு இந்தியன் வங்கி ரூ.1 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 236 ரூபாயும், ஒரு லட்சத்திற்கு மேல் வைக்கப்படும் நகைகளுக்கு 0.2 சதவீதம் பரிசீலனைக் கட்டணமும் வசூலிக்கிறது. தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 31ஆம் தேதி வரை இக்கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தகவல் அறிய, தங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகி சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Read More : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி..? என்னென்ன ஆவணங்கள் தேவை..? வீட்டிலிருந்து நீங்களே அப்ளை பண்ணலாம்..!!