நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற, கள் விடுதலை மாநாட்டில், பச்சிளம் குழந்தைக்கு கள் ஊத்திக்கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது மேடையிலேயே பனை ஓலையில் கள் குடித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அப்போது, அருகில் இருந்த நாதக தொண்டர்களும் முழக்கங்களை எழுப்பி கள் குடித்து ஆதரவளித்தனர். இதையடுத்து, அருகில் இருந்த விவசாயி ஒருவர் கையில் வைத்திருந்த பச்சிளம் குழந்தைக்கும் பனை ஓலையில் கள் ஊத்திக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக மாநாட்டில் பேசிய சீமான், தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? கள்ளுக்கடைக்கு அனுமதி அளித்தால், டாஸ்மாக் கடையில் வியாபாரம் குறைந்துவிடுமோ? உயிரை குடிக்கும் விஷக்கடைகளை திறக்கும் அரசு, கள்ளுக்கடைகளை திறக்க ஏன் மறுக்கிறது? என்று சரமாரி கேள்வி எழுப்பினார். தேசிய பானமான கள்ளுக்கு, தமிழகத்தை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவதை ஆய்வு செய்யாத அரசு டாஸ்மாக் விற்பனை குறைவதை ஆய்வு செய்கிறது. கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா?அருகிலிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் அனுமதி உண்டு, தமிழகத்தில் மட்டும் இல்லை. காரணம் மற்ற மாநில முதல்வர்களுக்கு சாராய ஆலை இல்லை இங்கு இவர்களுக்கு சாராய ஆலை இருகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதல்வருக்கு சாராய ஆலை இருக்கிறதா? தமிழகத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் பாஸ்மார்க் வாங்குகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்கிறார்கள். சட்டசபையில் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடுகிறோம் என அமைச்சர் பேசுகிறார். இந்த பொங்கலுக்கு 2 நாட்களில் ரூ.725 கோடிக்கு குடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதற்கு இலவசம்? கள் இறங்குவது வேளாண்மை சார்ந்த தொழில்தானே என்று சீமான் பேசினார்.