மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை நடப்பாண்டில் மட்டும் 3வது முறையாக நிரம்பியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து கனமழை காரணமாக ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி 2வது முறையாக மீண்டும் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின்னர் டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் சரியத் தொடங்கியது.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்படி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை வெளுத்துவாங்கியது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. இந்த நிலையில், மேட்டூர் அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம், மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
Readmore: குட்நியூஸ்!. பொங்கலுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறையா?. வெளியாக போகும் அறிவிப்பு?