சீன நாட்டில் தற்போது HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா போலவே இதுவும் ஆபத்தானதாக மாறுமா என்ற கவலை உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. ஹெச்.எம்.பி.வி. (HMPV) வைரஸ் கடந்த 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியது. சீனாவில் நிமோனியா காய்ச்சல் திடீரென அதிகரித்து வந்த நிலையில், அதற்கு காரணம் தெரியாமல் ஆராய்ச்சி செய்து வந்த அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம், ஹெச்.எம்.பி.வி. வைரஸ் காரணமாகவே நிமோனியா பாதிப்பு அதிகரித்திருப்பதை கண்டுபிடித்துள்ளது. தற்போது சீனாவில் குளிர்காலம் நிலவி வரும் நிலையில், இந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.
HMPV வைரஸின் அறிகுறிகள் என்ன..?
* இருமல்
* காய்ச்சல்
* சளி
* மூச்சு விடுவதில் சிரமம்
* மூக்கடைப்பு
* மூச்சுத் திணறல்
* சில சமயங்களில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
* இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த 3 முதல் 6 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து நோயின் காலம் மாறுபடலாம்.
HMPV வைரஸ் வராமல் தடுப்பது எப்படி..?
* வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.
* வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.
* கைகளை கழுவாமல் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொட வேண்டாம்.
* வைரஸின் அறிகுறிகள் இருக்கும் நபர்களிடம் இருந்து இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
* உங்களுக்கு HMPV அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்தால், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* தும்மும்போதும், இருமும்போதும் உங்கள் கைகளை வைத்துக் மூடிக் கொள்ள வேண்டும்.
* பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மீண்டும் லாக்டவுன்..?
சீனாவில் தற்போது இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் அங்கு லாக்டவுன் போடப்படலாம் என மக்கள் அஞ்சுகிறார்கள். மேலும், சீனாவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. HMPV வைரஸ் தவிர இன்புளுயன்ஸ்சா ஏ, மைகோபிளாஸ்மா நிமோனியா, கொரோனா ஆகியவையும் பரவி வருவதால், பல மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் இருந்து தான் இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவியது. கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீட்டனர். தற்போது, கொரோனா பரவல் என்பது உலகம் முழுவதும் லாக்டவுன், தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தான், தற்போது சீனாவில் HMPV என்ற புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.