திருமண உறவில் இருந்து பிரிந்து சென்ற மனைவியை, கம்பெனியில் வைத்து கத்திக்குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த கோபால்(40), வெல்டிங் பட்டறை தொழிலாளியான இவருக்கு மணிமேகலா(28) என்ற மனைவி, 10வயதில் கோகுல், 7 வயதில் தமிழினி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதிகள் இருவரிடையே வயது வித்தியாசம் இருந்த போதிலும், நல்ல வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இருப்பினும், குடும்ப செலவுக்காக மனைவி மணிமேகலா, திருமண கேட்டரிங் வேலைக்கு அவ்வபோது செய்து வந்துள்ளார். இதனை பிடிக்காத கணவர் கோபால், கேட்டரிங் வேலை செய்யக்கூடாது என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், கடந்த ஒரு மாதமாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, கம்பெனி ஒன்றிற்கு மணிமேகலா வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்து கணவர் சமாதானம் பேசி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதற்கு மணிமேகலை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலாவை கோபால் குத்தியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயும் உயிரிழந்த நிலையில், தந்தையும் சிறைக்கு சென்றதால் குழந்தைகள் இரண்டும் நிர்க்கதியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.