மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். 45 வயதான இவர், பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கல்பனா (வயது 35). இவர், அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஸ்வேதா (20) என்ற மகளும், சேத்தன்குமார் (19) என்ற மகனும் உள்ளனர். ஸ்வேதாவுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், சேத்தன்குமார் ஐடிஐ படித்து வருகிறார்.

இந்நிலையில், கணவர் ஆனந்தகுமார் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததால், அடிக்கடி கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார், கல்பனாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது, நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் கட்டையால் அடித்தும், கல்பனாவின் தலையை சுவற்றில் பலமாக மோதியும் தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆனந்தகுமார் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டார். பின்னர், இந்த சம்பவம் குறித்து அறிந்த பாகலூர் போலீசார், கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஆனந்தகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : குட் நியூஸ்..!! சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை அதிரடி குறைப்பு..!! அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!!