எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கியில் அதிமுக ஆட்சியில் பயிர், நகைக்கடன்களில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இவ் வங்கியில் 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் வழங்குதல், வங்கியில் அதிமுக ஆட்சியின்போது பயிர்க் கடன், நகைக் கடன் வழங்கியதில் பெறப்பட்ட டெபாசிட்டுகள், பயிர் கடன் தள்ளுபடி, ஆகியவற்றில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முத்துவிஜயா, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2023 ஆண்டு ஜூலை மாதம் கூட்டுறவு வங்கியின் செயலாளர் மோகன், துணைச் செயலாளர் மணி, கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் மோகன் குமார், ஆகியோரை கைது செய்தனர். கையாடலில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் சத்யா பானு, துணைத் தலைவர் வடிவேலு, நிர்வாக குழு உறுப்பினர் கொழந்தைவேலு, ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் கடந்த 2024 பிப்ரவரி 2ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதுவரை, இந்த வழக்கில் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சத்தியபானு, துணை தலைவர் வடிவேல் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், தற்போது நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், வங்கியின் முன்னாள் உறுப்பினர்கள் பெரியசாமி, முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு செய்த பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளனரா என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.