மரண தண்டனை விதிக்கப்படும் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி காலை ஒரு பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த மேற்குவங்க காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது. மேலும், கொல்லப்பட்டு கிடந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகியிருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு போராட்டங்களும் நடந்தன.

இதற்கிடையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட 9-ம் தேதியே குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் தான் குற்றத்தை செய்தார் என்பதற்கு ஆதாரமாக செமினார் ஹாலில் இருந்த உடைந்த ப்ளூடூத்தை போலீஸார் காண்பித்தனர். அந்த ப்ளூடூத் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் போனோடு இணைந்திருந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கு சிபிஐ வாசம் ஒப்படைக்கப்பட்டது.

பெண் மருத்துவர் உடலின் வெளிப்புறத்தில் 16 காயங்களும், உள்புறத்தில் 9 காயங்களும் இருந்திருக்கிறது. மேலும், அவர் நகத்தில் இருந்த ரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அது சஞ்சய் ராய்யின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போகிறது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிபர்ன் தாஸ், கடந்த 18ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் தடயவியல் துறையின் ஆதாரங்களும், டி.என்.ஏ. மாதிரிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதியாகியுள்ளது என்று தெரிவித்து சஞ்சய் ராயை குற்றவாளி எனத் தெரிவித்தது. குற்றவாளிக்கான தண்டனை விவரம் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று நாடே எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் ரூ.50,000 அபராதமும் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Readmore: புலி நகம் சங்கிலி அணிந்து கெத்து!. இன்ஸ்டா பேட்டியால் சிக்கிய தொழிலதிபர்!. தட்டித்தூக்கிய போலீஸ்!.