சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், மனித கை ஒன்று சக்கரத்தில் சிக்கி இழுத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரில் இருந்து கடந்த 10ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அடைந்தது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், ரயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலின் முன் பகுதியில் உள்ள ரயில் சக்கரத்தில் துண்டிக்கப்பட்ட மனித கை ஒன்று சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள், உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீசார், துண்டிக்கப்பட்ட மனித கையை மீட்டு பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில், ரயில் சக்கரத்தில் சிக்கி இழுத்து வரப்பட்ட கை ஆண் ஒருவரின் வலது கை என்பது தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த கை யாருடையது..? எங்கிருந்து வந்தது..? எப்படி ரயிலில் சிக்கியது..? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், இந்த ரயில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் சேலம் ரயில் நிலையம் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் உடலில் வலது கை மட்டும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் அவரின் வலது கையில் உள்ள அங்க அடையாளங்களை கொண்டு விசாரித்ததில் ரயிலில் இழுத்து வரப்பட்ட கை அவருடைய கை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்தவரின் கையை சேலத்திற்கு அனுப்பி வைக்க ரயில்வே நடவடிக்கை எடுத்தனர். சேலத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் கை சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக 345 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

Read More : குடிபோதையில் தகராறு..!! பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி சம்பவம்..!!