மனைவியை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், 2வது திருமணம் செய்துவைக்கக் கோரி ஏற்பட்ட தகராறில் அண்ணன் மனைவியை வெட்டிக்கொலை செய்த கொழுந்தனாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன், வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். லட்சுமணனின் தம்பதி சுரேஷும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், விடுமுறையில் விளாம்பட்டிக்கு வந்துள்ளார். இருப்பினும், சுரேஷ் மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்தநிலையில், சுரேஷுக்கும் சங்கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ் சங்கீதாவின் வீட்டுக்கு சென்று தனியாக இருந்த சங்கீதாவிடம் பேசியபோது அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது தனக்கு 2வது திருமணம் செய்து வைக்குமாறு அண்ணன் மனைவி சங்கீதாவிடம் சுரேஷ் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளார்.
இந்த நிலையில் சங்கீதா அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பின்னர் பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Readmore: ஈரோடு கிழக்கில் வெற்றியை உறுதி செய்த திமுக..!! நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுத்த நோட்டா..!!