வயதான காலத்​தில் பெற்றோரை கவனிக்​கா​விட்​டால், பிள்ளைகளுக்கு தானமாக வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்​ய​லாம் என்று உச்ச நீதி​மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, தனது மகன் சரியாக கவனிக்க​வில்லை எனவே, மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்​டும் எனவும், சொத்து​களுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்​டும் எனவும் ம.பி. உயர்நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். உயர்நீதி​மன்​றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “வயதான பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்க​வில்லை என்ற காரணத்​துக்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது. பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால், தானப் பத்திரம் செல்லாது என எந்த நிபந்​தனையை​யும் மனுதாரர் விதிக்க​வில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது” என வழக்கை தள்ளுபடி செய்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி​மன்​றத்​தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்​தார். மனுவை விசாரித்த நீதிப​திகள் சி.டி.ரவிக்​கு​மார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சட்டத்​தின்படி மட்டுமே ஆராய்ந்து ம.பி. உயர்நீதி​மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், மூத்த குடிமக்​களின் உணர்​வு​களைப் பாது​காக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை கொடுத்த பிறகு பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்​கிறது. இந்த சூழலில், பிள்​ளைகள் கவனிக்காமல் விட்டால் ‘பெற்​றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்’ சட்டத்தின்படி பிள்​ளை​களுக்கு பெற்​றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்​ய​லாம். அந்த தான பத்திரத்தை செல்​லாது என்று அறிவிக்​கலாம் என்று உத்தரவிட்டது.

இந்தச் சட்டம் மூத்த குடிமக்​களுக்கு உதவி செய்​வதற்காக உள்ளது. எனவே, குடும்பத்​தில் இருந்து ஒதுக்​கப்​படும் மூத்த குடிமக்கள் விஷயத்​தில் சட்டத்தை கடுமையாக செயல்​படுத்த வேண்​டும். மேலும், அதில் தளர்​வுகள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் அளிக்க வேண்​டும். சொத்துகளை எழுதி வைத்​தவருக்கு தேவையான அடிப்படை வசதி​கள், உடல்​ரீ​தியான தேவைகளை சொத்துகளை பெற்​றவர் செய்ய வேண்​டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி ​கொடுத்தது செல்​லாது என்று அறிவிக்க ​முடி​யும்” என உச்சநீ​தி​மன்ற நீ​திப​தி​கள்​ தீர்ப்​பளித்​தனர்​.

தான பத்திரம் என்றால் என்ன?. பரிசு பத்திரம் என்பது பணப்பரிமாற்றம் இல்லாமல், பரிசு வழங்குபவர் தாமாக முன்வந்து, தங்களுடைய சொத்தை பிறருக்கு வழங்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும். இது எல்லா சொத்துக்களுக்கும் தேவையில்லை என்றாலும் பரிசின் சட்டபூர்வ நிலையை உறுதிப்படுத்த தான பத்திரம் உதவுகிறது. தான பத்திரங்களில் பல நன்மைகள் உள்ளன. தான பத்திரங்கள் உடனடியாக செயல்படுத்தப்படக் கூடியது. இதற்கு எந்த நீதிமன்ற உத்தரவும் தேவை இல்லை. உயில் மூலம் நீங்கள் செய்யும் செட்டில்மெண்டை விட, தான பத்திரத்தின் மூலம் வழங்கும்போது நேரம் மிச்சப்படுகிறது. தான பத்திரத்தின் கீழ் சொத்தை வழங்கும் நபர் நன்கொடையாளர் என்று அழைக்கப்படுகிறார்.

தான பத்திரத்தை வழங்குபவர் அதனை மனப்பூர்வமாக செய்ய விரும்புவதாகவும், பிறரின் எந்தவித கட்டாயமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் வழங்க வேண்டும். தான பத்திரம் தயாரிக்கப்பட்டதற்குப் பிறகு, தான பத்திரத்தை பெறுபவர் அதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக அதில் கையெழுத்திட வேண்டும். அவர் கையெழுத்திட்டு வாங்கும் போது பரிசை வழங்குபவர் உயிருடன் இருக்கும் போதே செல்லுபடியாகும் வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Readmore: குட் நியூஸ்..!! சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை அதிரடி குறைப்பு..!! அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!!