கேரள மாநிலம் திருச்சூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள், செப்.27 வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசாரால் பிடிபட்டனர். சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிச் சென்ற கண்டெய்னர் லாரியை 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் துரத்திப் பிடித்தனர். அப்போது, கண்டெய்னரில் இருந்து கும்பல் கற்களை வீசி தாக்கியதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு கொள்ளையனை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், நாமக்கல்லில் பிடிபட்ட கொள்ளையர்கள் குறித்து அம்மாவட்ட எஸ்பி ராஜேஷ் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ”ஏடிஎம் கொள்ளையர்கள் பெரிய நெட்வொர்க்காக இருப்பது தெரியவந்துள்ளது. 60 முதல் 70 பேர் கொண்ட கும்பல், குழுக்களாகப் பிரிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெப்படையில் பிடிபட்ட கும்பல் தான் கடந்த வாரம் கடப்பா ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடித்தது. 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஏடிஎம்மில் கொள்ளையடித்ததும் இவர்கள் தான்” என்று தெரிவித்தார்.

மேலும், திருடுவதில் கைதேர்ந்து 6 பேரை தேர்வு செய்து வெல்டிங் செய்ய ஒருவர், ஓட்டுநர் என குழுவாக செயல்பட்டுள்ளனர். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் 2 பேர் சென்னைக்கு வந்துள்ளனர். இரண்டு பேர் கண்டெய்னர் மூலமாகவும், மற்றவர்கள் கார் மூலமாகவும் திருச்சூருக்கு சென்று ஏடிஎம்மில் கொள்ளை அடித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

Read More : சேலத்தில் மாணவன் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆன ரூ.2.50 லட்சம்!. தந்தையின் செயலுக்கு பாராட்டு!