பொங்கல் பண்டிகைக்கு புதிய துணி எடுத்துக்கொடுக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மனைவி இறந்த சோகத்தில் கணவனும் விஷம் குடித்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 28). இவரின் மனைவி பவித்ரா (வயது 23). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், சிறு சிறு பிரச்சனைகளுக்காக இருவருக்கிமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், நேற்று பொங்கல் பண்டிகைக்காக துணி எடுக்க போலாம் என்று இளம்பெண் கூறியதாகவும், இதனை பொருட்படுத்தாமல் வீட்டில் இருந்து சந்தோஷ் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வருத்தத்தில் இருந்த பவித்ரா, துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து, வீட்டிற்கு திரும்பி வந்த கணவர் சந்தோஷ், உள்பக்கமாக கதவு பூட்டியிருந்தாகவும், நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த சோகத்தில் சந்தோஷும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை குடித்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், மயக்க நிலையில் கிடந்த சந்தோஷை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.