நீட் விவகாரம் தொடங்கி அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வரை பேரவையில் 3 மணிநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
2025ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவைக்கு வந்து உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது சர்ச்சையானது.
மறுபுறம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தவிர மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் “யார் அந்த சார்” பேட்ஜை அணிந்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கோஷங்களை எழுப்பினர்.
ஜனவரி 7ம் தேதி நடந்த தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்த போது எடப்பாடி பழனிசாமி கடுமையான காய்ச்சல் அவதிப்பட்டு வருவதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மதியம் சுமார் 1.40 மணிக்கு உரையை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி 3.50 வரை காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் பதிலளித்து வந்தார். அதில், எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று உரையை தொடங்கிய முதலமைச்சர், இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள். ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று? ஆட்சி முடிய இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர், நீட் தேர்வு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, நாங்கள் ரத்து செய்வதற்கான முழு முயற்சி மேற்கொள்வோம். நீட் தேர்வு ரத்துக்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று நாங்கள் கூறியது உண்மைதான். எங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவில்லை. ராகுல்காந்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை ஆனால் இப்போது மத்தியில ஆட்சியில் இருப்பது நீங்கள் முன்பு ஆதரவளித்த பாஜக. நாங்கள் கூட்டணியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. ஜெ. இருந்தவரை கூட நீட் தேர்வு தமிழகத்தில் இல்லை. நீங்கள் முதல்வராக வந்த பின்தான் நீட் வந்தது என்று அதிரடியாக பேசினார்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திமுக தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதற்கு எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தோம், நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும் மாநில அரசால் செய்ய முடியாது இந்த அடிப்படை தெரியாதா எதிர்க்கட்சித் தலைவருக்கு?ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை மாநில அரசு எப்படி ரத்து செய்ய முடியும்? என்று முதல்வர் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு வரும் முன்பு திமுக ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என்று விமர்சித்தார்.
இதையடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, 3 மணிநேரம் பேசியுள்ளீர்கள் ரொம்ப டயர்டா இருக்கீங்க.. ரெஸ்ட் எடுத்துக்குங்க என்று எடப்பாடி பழனிசாமியை பார்த்து கூறினார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி ‘நாங்க தெம்பா தான் இருக்கும்.. அங்க இருக்கவங்களுக்கு தான் கால் நடுங்குது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.