பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக, போராட்டம் நடத்தும் அப்பகுதி மக்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்தித்தார். முன்னதாக பரந்தூர் மக்களைச் சந்திப்பதற்காக கேரவன் வேனில் விஜய் சென்றார். கேரவனில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜய்க்கு வழிநெடுகிலும் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது முதன்முறையாக தவெக கொடி கட்டப்பட்ட வாகனத்தில் விஜய் பயணம் மேற்கொண்டார். பரந்தூரில் புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது, இயற்கை வளம் காப்போம் என்பது நமது கொள்கை; ஓட்டு அரசியலுக்காக நான் பேசவில்லை என்று கூறிய விஜய், உங்க போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசுவதை கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்க எல்லாரும் சந்தித்து பேச வேண்டும் என்று தோணுச்சு என்று கூறினார்.
உங்கள் எல்லோரும் கூட தொடர்ந்து நிற்பேன். ஒவ்வொரு வீட்டிற்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான். அதனால் உங்கள மாதிரியான விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான், என்னுடைய பயணத்தை துவங்க வேண்டும் என்று முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இது தான் என்று எனக்கு தோணுச்சு என்று விஜய் பேசினார்.
90% நீர் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கொண்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டிய விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது என்று விமர்சித்தார். டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன். டங்ஸ்டனுக்கு எதிரான நிலைப்பாட்டை பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் எடுத்திருக்க வேண்டும், அரிட்டாப்பட்டி மக்கள் போல தான் பரந்தூர் மக்களையும் பார்க்கவேண்டும் என்று கூறினார். விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை. பரந்தூரில் வேண்டாமென்றே சொல்கிறேன். விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது. விவசாய நிலங்களை அழிப்பது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும் என்று விமர்சித்த விஜய், விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் என்று சூளுரைத்துள்ளார்.
அனைவரையும் ஒன்றாக நினைத்துதான் அரசு செயல்படவேண்டும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சா என்று கேள்வி எழுப்பிய விஜய், எதிர்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பா என்று பேசினார். 8 வழிச்சாலை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை மட்டும் ஏன் தற்போதை அரசு எதிர்த்தது என்று குற்றம்சாட்டிய விஜய், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்ததுபோல் பரந்தூர் திட்டத்தை ஏன் தற்போதைய அரசு எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
உங்கள் நாடகத்தை மக்கள் இனி நம்பமாட்டார்கள்; மக்கள் இனி சும்மாவும் இருக்க மாட்டார்கள், நம்பும்படி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே; விவசாய நிலங்கள் இல்லாத இடத்தில் விமான நிலையம் கொண்டு வரவேண்டும். உங்களுக்காகவும் உங்கள் ஊருக்காகவும் நானும் எனது தொண்டர்களும் இருப்போம். பரந்தூர் மக்களுக்காக சட்டத்திற்கு உட்பட்டு எப்போதும் உறுதியாக இருப்போம் என்று விஜய் பேசியுள்ளார். மேலும் பரந்தூர் ஊருக்குள் வர எனக்கு ஏன தடை என்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பிய விஜய், தவெக தொண்டர்கள் நோட்டீஸ் தரக்கூட தடை விதித்தார்கள் என்று கூறினார்.