விஜய்யின் தவெக கட்சி கொடியுடன் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று, நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தனியார் நிறுவனம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். திருமயம் அண்ணா சீரணி கலையரங்கில் தொடங்கி, திருமயம் கடைவீதி, ஸ்டேட் பேங்க், புதுக்கோட்டை சாலை வரை மாரத்தான் நடைபெற்றது. அப்போது, மலைக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டியபடி கார் ஒன்று எதிரே வந்துள்ளது.

இதையடுத்து, வேகமாக வந்த அந்த கார் திடீரென சாலையில் நின்று கொண்டிருந்த தண்ணீர் வண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது. மாரத்தானில் பங்கு பெற்ற இளைஞர்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து, அந்த காரை மடக்கிபிடித்த பொதுமக்கள், காரில் இருந்த மூன்று இளைஞர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த மக்கள், இளைஞர்களை தர்ம அடிக்கொடுத்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர், சிவகங்கை, பலக்கோட்டை விஜய் மக்கள் இயக்க முன்னாள் ஒன்றியச் செயலாளராக இருந்த மணி என்பது தெரிய வந்துள்ளது. மூன்று பேர் மீதும் போலீசார் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Readmore: குமாரபாளையம் ஜல்லிக்கட்டு..!! இளைஞரின் தொண்டையை குத்திக் கிழித்த காளை..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!