மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.1,000 வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இத்திட்டத்தில் கூடுதலாக 10 லட்சம் முதல் 15 லட்சம் பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலினும் அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில், பெண்கள் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவருறுதி அளித்துள்ளார்.