தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்திவிட்டு, காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனர். இதனால் மனிதர்களும், விலங்குகளும் பாதிப்படுவதால், தமிழ்நாடு அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, இனி காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்துவிட்டு ரூ.10 பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது.

இத்திட்டம் முதற்கட்டமாக வனம் மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் தான், டாஸ்மாக் ஊழியர்கள் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, மதுபாட்டில்கள் வாங்கிய அதே நாளில் அதே கடையில் இந்த காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 வாங்க வேண்டும் என்பதால், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், மது பாட்டில்கள் வாங்குபவர்களுக்கும் இடையே மோதல்கள் வருகிறது.

இதற்காக மதுபாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டுவது போன்ற பணிகளையும் டாஸ்மாக் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமின்றி, திரும்பப் பெறும் மது பாட்டில்களை வைப்பதற்கு டாஸ்மாக் கடைகளில் போதுமான இடமும் இல்லை. எனவே, இத்திட்டத்தை உடனே தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, நவம்பர் மாதத்திற்குள் இத்திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி கூறுகையில், “காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு, மதுபானங்களை தயாரிக்கும் ஆலைகளையே காலி பாட்டில்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்யலாமா? அல்லது டெண்டர் கோரி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மூலமாக நிறுவனங்களுக்கு காலி மது பாட்டில்களை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கலாமா? என்று ஆலோசித்து வருகிறோம்.

மது ஆலைகளே காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதில் சிரமம் மிகவும் குறைவு என்பதால், மது ஆலைகளுக்கு டெண்டரை கொடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், அதற்குள் இது குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : பல தலைமுறைகளாக பூமிக்கு அடியில் ஆடம்பரமாக வாழும் மக்கள்..!! என்ன காரணம்..? சுவாரஸ்ய தகவல்..!!