தமிழ்நாட்டில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் செயல்படும் மதுபான கடைகளில் விற்பனையாகும் மதுவிற்கு பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் கடையில் பணி புரியும் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மது வகைகள் எது வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாகவும் காரணம் கேட்டால் மின்சாரம், கட்டிட வாடகை கூலிங் சார்ஜ் என விற்பனையாளர்கள் கூறுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் இது குறித்த வீடியோ வெளியியாவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது நடைபெற்று வருவதாக வாடிக்கையாளர்கள் கூறினர்.

ஏற்கனவே இது போன்ற புகார்கள் வந்தபோது டாஸ்மாக் சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடையின் சூப்பர்வைசர் உட்பட அனைத்து ஊழியர்களும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Readmore: சேலத்தில் நெகிழ்ச்சி!. பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!. வாட்ஸ் அப் குறுஞ்செய்தியில் ஒன்றுகூடி விழிப்புணர்வு